ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், கிராமமக்கள் கோரிக்கை


ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், கிராமமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2018 4:30 AM IST (Updated: 12 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே அக்னி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த புனல்வாசல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரையிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள அக்னிஆறு, மிகப்பெரிய காட்டாறு ஆகும். இதில் படிந்துள்ள மணல் மற்றும் கரையோர படுகை மற்றும் நிலங்களில் உள்ள மணல்வளம் பருவமழை காலங்களில் மழைநீரை சேமித்து வைத்துக்கொண்டு பல கிராமங்களுக்கு ஆண்டு முழுவதும் நிலத்தடி நீர் வழங்கி விவசாயம் செழிக்க உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆற்றில் தினமும் இரவு, பகல் பாராது பொக்லின் எந்திரம் உதவியுடன் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆற்றில் உள்ள மரங்களை பிடுங்குவதால் மண் அரிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மணல் திருட்டால் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் விவசாயமும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி விடும்.

மேலும் லாரிகள் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதால் குறிச்சி- புனவாசல் பாலம், கட்டையங்காடு பாலம், வாட்டாத்திக்கோட்டை பாலம், வாட்டாத்திக்கோட்டை நீர் சேமிப்பு சிற்றணை, இடையாத்தி நாற்பது கண்பாலம் ஆகிய பாலங்களும் சேதமடைந்து வருகின்றன. இதனால் வெள்ள காலங்களில் பேராபத்து ஏற்படும்.

இது குறித்து ஏற்கனவே மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் இந்த பகுதி மக்களின் நலன் கருதி, மணல் திருட்டை தடுத்து, எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ஆலங்குடி கன்னித்தோப்பு தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு சமூகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 100 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொத்தடை என்பவரால் வீடு இல்லாத ஏழைகளுக்கு கோவில் நிலத்தில் இருந்து பிரித்து கொடுக்கப்பட்டது. இதில் எதுவும் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை.

இதுவரை நாங்கள் வீட்டுவரி, தண்ணீர்வரி, மின்சார கட்டணம் போன்றவை செலுத்தி வருகிறோம். தற்போது இந்து அறநிலையத்துறையினர், நாங்கள் குடியிருக்கும் இடத்தை 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என நோட்டீசு அனுப்பி உள்ளனர். காலி செய்யாவிட்டால் வீடுகள் இடிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். வீடு இல்லாத நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே கலெக்டர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். 

Next Story