அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை: புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு


அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை: புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:45 PM GMT (Updated: 11 Jun 2018 10:25 PM GMT)

புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

தமிழகத்தில் அடுத்த ஆண்டுமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஏற்கனவே அரசால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் ஸ்மிதா, என்ஜினீயர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், கப்புகள் போன்றவற்றை புதுவையில் தடை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான வழிமுறைகள், சட்ட வழிகள் மற்றும் மாற்றுப்பொருட்களின் உற்பத்தி போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர்கள் பரிசோதனை நடத்தி அத்தகைய பொருட்கள் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.

ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட் களின் உபயோகத்தை தடை செய்வதற்கான செயல் திட்டத்தை 15 நாட்களில் அளிப்பதாக துறை செயலாளர் பார்த்திபன் தெரிவித்தார்.

Next Story