பொள்ளாச்சி அருகே பயங்கரம் நிதி நிறுவன அதிபர் கடத்தி கொலை
பொள்ளாச்சி அருகே நிதி நிறுவன அதிபரை கடத்தி சென்று கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆனைமலை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரியில் இருந்து பம்பு ஹவுஸ் செல்லும் வழியில் சாலையோரத்தில் சட்டையில் ரத்த கறைபடிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு நேற்று அதிகாலையில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் அம்மா துரை, சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ராஜேந்திர பிரசாத், வள்ளியம்மாள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு தலை வெட்டுக்காயங்களுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணம் கிடந்தது. அருகிலேயே மதுபாட்டில்கள், டார்ச் லைட், ஜர்க்கின், டைரி போன்றவை கிடந்தது. இதை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து கிடந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:–
பொள்ளாச்சி வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அவருடைய மனைவி தெய்வானை. இவர்களுடைய மகன் கந்தசாமி (வயது 47). இவர் வீடு கட்டி விற்பனை செய்வது, கார் வாங்கி விற்பனை செய்வது போன்ற தொழில் செய்து வந்தார். மேலும், பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். சொந்த முயற்சியில் கந்தசாமி நிதி நிறுவன தொழிலில் வளர்ச்சி அடைந்து வந்துள்ளார்.
இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்தது. இதையடுத்து கந்தசாமி தாயாருடன் பொள்ளாச்சியில் வசித்து வந்தார்.
கந்தசாமி பல்வேறு தொழில் செய்து வந்ததால் தினமும் வீட்டுக்கு இரவு தாமதமாக செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதையடுத்து தயார் தெய்வானை எப்படியும் கந்தசாமி வீட்டுக்கு வந்துவிடுவார் என்று காத்து இருந்தனர். ஆனால் அதிகாலை அவர் வீட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் பொள்ளாச்சி அருகே பிணமாக கிடந்துள்ளார். அவரது தலையில் அரிவாளால் பலமாக வெட்டப்பட்டு இருந்தது. கந்தசாமிக்கு தொழில் ரீதியாக பலருடன் தொடர்பு இருந்துள்ளது. எனவே தொழில் போட்டி காரணமாக அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு பிணத்தை வீசிச்சென்று இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
கந்தசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஆனைமலை போலீசார் கந்தசாமியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் ரீதியாக தொடர்பில் உள்ளவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே தடயவியல் நிபுணர் சங்கீதா, பிணம் கிடந்த பகுதியில் தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் கனி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்குள்ள வாழைத்தோட்டம் அருகே நின்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
கந்தசாமி ஓட்டிச்சென்ற மேட்டார் சைக்கிளை காணவில்லை. எனவே மர்ம நபர்களை கொலை செய்து விட்டு மேட்டா£ர் சைக்கிளை ஓட்டிச்சென்று இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபரை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.