9 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்றதாக தந்தைக்கு கீழ் கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனை ரத்து
ராமேசுவரத்தில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
ராமேசுவரம் கரையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (வயது 51). இவரது 9 வயது மகள் கடந்த 2013–ம் ஆண்டில் ராமேசுவரம் கடற்கரையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாள். இது தொடர்பாக ராமேசுவரம் கோவில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில், அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
3 ஆண்டுக்குப் பிறகு மாரிமுத்துவே தனது மகளை பலாத்காரம் செய்து கொன்று உடலை கடலில் வீசியுள்ளார் என்று அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கின் தீர்ப்பு மதுரை ஐகோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக மூத்த வக்கீல் அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணையின்போது அவர் ஆஜராகி, “சிறுமி இறந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுக்கு பின்னர் தான் மாரிமுத்துவை போலீசார் கைது செய்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். ஆனால் கடற்கரையில் இறந்து கிடந்த மகளை தன்னுடைய மடியில் போட்டு அழுது கொண்டு இருந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர் தனது மகளை பலாத்காரம் செய்து கொன்றதாக கூறுவது நம்பும்படியானதாக இல்லை“ என்றார். விசாரணை முடிவில் மாரிமுத்துவுக்கு கீழ்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.