மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த பெயிண்டர் கோர்ட்டில் சரண்


மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த பெயிண்டர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 13 Jun 2018 4:45 AM IST (Updated: 13 Jun 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் குடும்பத்தகராறு காரணமாக மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த பெயிண்டர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

கணபதி,

கோவை கணபதி எப்.சி.ஐ. குடோன் ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 62), பெயிண்டர். இவருடைய மனைவி கோமதி. இவர்களது மகள் சாரதா (28). இவருடைய கணவர் குணவேல் (32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2½ வயதில் அஸ்வந்த் என்ற மகன் உள்ளான்.

பெங்களூருவில் தங்கி இருந்து பணியாற்றிய குணவேல் அடிக்கடி கோவை வந்து தனது மனைவி மற்றும் மகனை பார்த்துச்செல்வது வழக்கம். இதன் காரணமாக தியாகராஜன் தனது மகளை கணபதி போலீஸ் குடியிருப்பில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குணவேல் கோவை வந்தார். அப்போது கணவன்–மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில், குணவேல் தனது மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு சாரதா தனது மகனுடன் தந்தை வீட்டிற்கு சென்றார். இதனால் குணவேல் மீது தியாகராஜன் ஆத்திரத்தில் இருந்தார்.

இதற்கிடையே, குணவேல் போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் இருப்பதாக கடந்த 10–ந் தேதி தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவரிடம் தனது மகளை அடித்தது தொடர்பாக கேட்பதற்காக தியாகராஜன் இரவு 9 மணியளவில் அங்கு சென்றார். அப்போது மருமகனுக்கும் தியாகராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தியாகராஜன், குணவேலை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனைதொடர்ந்து தியாகராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தியாகராஜனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கோவை 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தியாகராஜன் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஞானசம்பந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து தியாகராஜனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த தியாகராஜனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளோம். இதற்காக ஓரிரு நாட்களில் கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்’ என்றனர்.


Next Story