மாவட்ட செய்திகள்

உரம் வாங்க ஆதார் அட்டை கேட்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு + "||" + Farmers protest to ask Aadhaar card to buy manure

உரம் வாங்க ஆதார் அட்டை கேட்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

உரம் வாங்க ஆதார் அட்டை கேட்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
உரம் வாங்க ஆதார் அட்டை கேட்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடையில் இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பலகையை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
தஞ்சாவூர்,

தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) சுரேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- 2016-17-ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகை மற்றும் மாநில அரசின் பரிந்துரைவிலையை உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் கரும்பு விலையை நிர்ணயிப்பது தொடர்பாக முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். குருங்குளம் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர்:- கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் ஆதார் கட்டாயம் என்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நான் தற்போது குறுவை சாகுபடிக்கு ரூ.70 ஆயிரத்துக்கு உரம் கொள்முதல் செய்தேன். அப்போது ஆதார் அட்டை, கைரேகை பதிவு செய்தனர். பூதலூரில் ஒரு உரக்கடையில் உரம் வாங்க வேண்டுமானால் ஆதார் கட்டாயம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அவ்வாறு எதுவும் இல்லாத சூழ்நிலையில் ஏன் இது போன்று செய்கிறார்கள். இதே கருத்தை பல விவசாயிகள் தெரிவித்து ஆதார் அட்டை கட்டாயம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கோட்டாட்சியர் சுரேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து உடனடியாக குறிப்பிட்ட கடைக்கு சென்று அறிவிப்பு பலகையை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

ஆம்பலாப்பட்டு பாசனதாரர் சங்க தலைவர் தங்கவேல்:- குறுவை சாகுபடி திட்டத்திற்காக அரசு ரூ.116 கோடி அறிவித்துள்ளது. விதைகள் தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விதைகளும் தரம் குறைவாக உள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் என்னென்ன விதைகள் விற்பனை செய்யப்படுகிறது? எவ்வளவு டன் விற்பனைக்கு உள்ளது? என்பதை அறிவிக்க வேண்டும்.

வேளாண்மை மையங்களுக்கு சென்றால், தனியார் கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ளுமாறு கூறுகிறார்கள். தனியார் கடையில் விற்கப்படும் விதையை எவ்வாறு நம்பி வாங்குவது. எனவே தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்து நல்ல விதை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.