10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Jun 2018 4:15 AM IST (Updated: 13 Jun 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அனுப்பர்பாளையம்,

 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூரை அடுத்த 4 செட்டிபாளையம் அன்னையம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலாதேவி (38). இவர்களுடைய மகள் காவ்யாஸ்ரீ (16). இவள் திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலையில் வழக்கம் போல் சீருடை அணிந்து காவ்யாஸ்ரீ பள்ளிக்கு சென்றாள்.

பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த மாணவி புத்தக பையை வைத்து விட்டு கழிவறைக்கு சீருடையுடன் சென்றாள். அதன்பின்னர் நீண்ட நேரமாகியும், கழிவறையில் இருந்து அவள் வெளியே வரவில்லை. இதனால் வீட்டில் இருந்த கலாதேவி, அங்கு சென்று “கழிவறை கதவை தட்டி, கதவை திறந்து கொண்டு வெளியே வருமாறு” மாணவியிடம் கூறினார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கலாதேவி, கழிவறை கதவின் அருகில் நாற்காலியை போட்டு உள்ளே எட்டிப்பார்த்தார். அப்போது கழிவறையில் காவ்யாஸ்ரீ துப்பட்டாவால் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உயிரிழந்த நிலையில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்யும் முன்பு மாணவி, கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளாரா? என்று அவருடைய புத்தக பையில் போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் பள்ளி மாணவி ஒருவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story