கவுரி லங்கேஷ் கொலை: மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருந்த வாலிபர் கைது


கவுரி லங்கேஷ் கொலை: மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2018 12:01 AM GMT (Updated: 13 Jun 2018 12:01 AM GMT)

கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 5-ந் தேதி மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருவதுடன், கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக ஏற்கனவே மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி பிரவீன் என்ற சுஜீத்குமார், அமோல் காலே, பிரதீப், மனோகர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் இவர்கள் 4 பேரும், மைசூருவை சேர்ந்த எழுத்தாளரான பகவானை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் 4 பேரையும் சிறப்பு விசாரணை குழுவினர் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவர்களது போலீஸ் காவல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து, பிரவீன், அமோல் காலே, பிரதீப், மனோகர் ஆகிய 4 பேரும் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கவுரி லங்கேஷ் கொலையில் சிறப்பு விசாரணை குழுவினர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆனாலும் இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களை கைது செய்ய சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், கைதான நவீன்குமார் கொடுத்த தகவலின் பேரில் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய சிலர் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிறப்பு விசாரணை குழுவை சேர்ந்த தனிப்படை போலீசார் மராட்டிய மாநிலத்திற்கு சென்றிருந்தனர். அந்த மாநில போலீசாரின் உதவியுடன் அங்கு பதுங்கி இருந்த கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய ஒரு வாலிபரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். அந்த வாலிபரை பெங்களூருவுக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

அப்போது அவர் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர்(வயது 26) என்றும், அவர் இந்து அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த 2012-ம் ஆண்டு சிந்தகி தாசில்தார் அலுவலகம் முன்பு இந்து அமைப்புகள் சார்பில் நடந்த போராட்டத்தில் பரசுராம் கலந்து கொண்டு இருந்தார். அப்போது பஸ்கள் மீது கற்களை வீசியதாக பரசுராம் மீது சிந்தகியில் வழக்கும் பதிவாகி இருந்தது தெரிய வந்துள்ளது. கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட தினத்தில், அவரது வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக பரசுராம் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், கைதான பரசுராமை பெங்களூரு கோர்ட்டில் சிறப்பு விசாரணை குழு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து பரசுராமிடம் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, ரகசிய இடத்தில் வைத்து பரசுராமிடம் சிறப்பு விசாரணை குழு போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்பு கவுரி லங்கேஷ் கொலையில், பரசுராமுக்கு உள்ள தொடர்பு பற்றிய முழு விவரம் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story