சிவகாசி அச்சகத்தில் பிரபல பீடி நிறுவனங்களின் போலி லேபிள்கள் பறிமுதல் வாலிபர் கைது
சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி லேபிள்கள் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
தமிழகத்தில் உள்ள பிரபல பீடி நிறுவனத்தின் கிளை மதுரையில் உள்ளது. இதன் மேலாளராக டி.வி.எஸ். நகரை சேர்ந்த முகமது அப்துல்லா(வயது 42) பணியாற்றி வருகிறார். இவர் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். புகாரில் எங்களது நிறுவனத்தில் பெயரில் போலி லேபிள் அச்சடிக்கப்பட்டு வியாபார நோக்கத்தோடு விற்பனை செய்யப்படுவதாகவும், அதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் தான் இந்த போலி லேபிள்கள் அச்சக்கடிப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறி இருந்தார்.
இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் மற்றும் போலீசார் புகார்தாரர் கூறிய சில இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது நாராணாபுரம் ரோட்டில் இந்திராநகரில் உள்ள ஒரு அச்சகத்தில் சோதனை செய்தபோது அங்கு பிரபல பீடி நிறுவனங்களின் பெயரில் போலி லேபிள்கள் அச்சடித்து பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அந்த பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அச்சகத்தில் இருந்த திருப்பதி(23) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தங்கராஜ், முத்து ஆகியோரை தேடி வருகிறார்கள்.