கொட்டாம்பட்டி அருகே ஓட்டல் ஊழியர் கொலையில் மனைவி– கள்ளக்காதலன் கைது
கொட்டாம்பட்டி அருகே ஓட்டல் ஊழியர் கொலையில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கொட்டாம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள பூதக்குடியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 40). ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி செல்லம்மாள் (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நத்தம் ஆத்திபட்டியை சேர்ந்த கலையரசு(34) என்பவருக்கும், செல்லம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த வடிவேல், செல்லம்மாளை கண்டித்துள்ளார். இதனால் கணவன்–மனைவி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்லம்மாள் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதனுடன் சென்று விட்டார். அவர்கள் கொட்டாம்பட்டியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்தனர். மனைவி, குழந்தைகள் மாயமானதால் வடிவேல் பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது அவர்கள் கொட்டாம்பட்டியில் இருப்பது தெரியவந்தது.
அதன்பின்னர் அங்கு வந்த வடிவேல், மனைவியை சொந்த ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லம்மாள், அவரது கள்ளக்காதலன் கலையரசு ஆகியோர் வடிவேலுக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்துள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர்.
அதன்பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிபட்டி விலக்குப்பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் போட்டு விட்டு சென்றுவிட்டனர். மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக கொட்டாம்பட்டியில் வசித்த வீட்டை காலி செய்து விட்டு சிங்கம்புணரிக்கு சென்று விட்டனர்.
வடிவேலுவின் தம்பி சிவமணி, தனது அண்ணன் குடும்பத்தினர் மாயமானது தொடர்பாக வலைச்சேரிபட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் கொட்டாம்பட்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி தலைமையில் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை நடந்து 1½ வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. தனிப்படை போலீசாரின் விசாரணையில் செல்லம்மாள் தான் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து செல்லம்மாள் மற்றும் கலையரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவல்களின் பேரில், வடிவேலுவின் உடலை மீட்க அதிகாரிகள் சென்றனர். அதில், எலும்புகள் மட்டுமே கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.