ஜோகேஸ்வரி, பன்வெலில் ரூ.27 கோடி போதைப்பொருள் பறிமுதல்


ஜோகேஸ்வரி, பன்வெலில் ரூ.27 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Jun 2018 12:05 AM GMT (Updated: 14 Jun 2018 12:05 AM GMT)

ஜோகேஸ்வரி, பன்வெலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.27 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசாருடன் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 33 கிலோ எடையுள்ள கேட்டமைன் என்ற போதைப்பொருளை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அங்கு வசித்து வந்த ஜலந்தரை சேர்ந்த அக்சிந்தர் சிங் சோதி என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பன்வெலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அதிகளவில் போதைப்பொருள் பதுக்கி வைத்து மும்பை, கோவா மற்றும் வெளிநாடுகளுக்கு வினியோகம் செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் பன்வெலில் உள்ள குறிப்பிட்ட ரசாயன தொழிற்சாலையில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில், அங்கிருந்த 279 கிலோ கேட்டமைன், 140 கிராம் கோகைன், 1.5 கிலோ ஓபியம், 7.8 கிலோ ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27 கோடி ஆகும்.

அங்கிருந்த ராகுல் ஷேட்கே, அந்தோனி பால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


Next Story