கடலூர் முதுநகர் அருகே விபத்து: டீக்கடைக்குள் அரசு பஸ் புகுந்தது; என்ஜினீயர் பலி


கடலூர் முதுநகர் அருகே விபத்து: டீக்கடைக்குள் அரசு பஸ் புகுந்தது; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 14 Jun 2018 11:00 PM GMT (Updated: 14 Jun 2018 8:51 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் அரசு பஸ் புகுந்ததில் என்ஜினீயர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் முதுநகர்,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பேய்க்காநத்தம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார்(வயது 33). என்ஜினீயரிங் படித்துள்ள இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆவார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று செந்தில்குமார் சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு வந்தார். பின்னர் அவர் ஊருக்கு திரும்பினார். அப்போது கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு டீக்கடைக்கு சென்று டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது கடலூரில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ் கண்ணாரப்பேட்டையில் சென்ற போது, சாலையின் குறுக்கே ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென சென்றது. இதனால் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க, டிரைவர் பஸ்சை திருப்பினார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர டீக்கடைக்குள் திடீரென புகுந்தது.

இதனால் கடைக்குள் இருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அங்கு டீ குடித்து கொண்டிருந்த செந்தில்குமார் மட்டும் கடைக்குள் சிக்கி கொண்டார். அவர் மீது பஸ் மோதியதில், பலத்த காயமடைந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் செந்தில்குமார் உயிரிழந்து இருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story