குடகு மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


குடகு மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 14 Jun 2018 11:51 PM GMT (Updated: 14 Jun 2018 11:51 PM GMT)

குடகு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

குடகு,

கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அங்கு இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல் காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்த நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் குடகு மாவட்டமே ஸ்தம்பித்து உள்ளது.

பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. மேலும் பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இடங்கள் வெள்ளக் காடாக மாறி உள்ளன. ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி உள்ளவர்களை மீட்புக்குழுவினர் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள். வீடுகள், காம்பவுண்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

இப்படி இருக்க நேற்றும் குடகு மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தால் ஆற்றின் கரைகள் இடிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களை அரசு அதிகாரிகள் மீட்டு, பள்ளிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

இதற்கிடையே சில இடங்களில் காவிரி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள சில கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களையும் அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் மாவட்டத்தில் பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவைகளை தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் ஒன்று சேர்ந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

தொடர் மழையால் பல இடங்களில் வீடுகள் பலவீனமாக காணப்படுகின்றன. அவைகள் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கின்றன. இதற்கிடையே தொடர் மழை காரணமாக நேற்று குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா பிறப்பித்தார்.

இந்த தொடர் மழையால் குடகு மாவட்டத்தில் உள்ள அப்பி, மல்லள்ளி உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மிகவும் ரம்மியமான சூழலில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்ப்பதற்காக தற்போது அப்பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இதற்கிடையே பல இடங்களையும், சாலைகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பல கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் இருந்து மாகுட்டா வழியாக கேரளா செல்லும் நெடுஞ்சாலையை வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க மாகுட்டா வழியாக செல்லும் குடகு-கேரளா நெடுஞ்சாலையை, போக்குவரத்துக்கு பயன்படுத்த ஒருமாத காலத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த சாலையை நேற்று முதல் ஒருமாத காலத்திற்கு வாகன ஓட்டிகள் யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட வாகனங்களும் நாசமடைந்து உள்ளன. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும் தொடர் மழையால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக குடகு மாவட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story