பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு


பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு
x
தினத்தந்தி 16 Jun 2018 4:00 AM IST (Updated: 16 Jun 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அணையில் 6 மதகுகளை இயக்கி சோதனை செய்து பார்த்தனர்.

தேனி,

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. தமிழக–கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். இந்த குழுவினர் கடைசியாக கடந்த மாதம் 10–ந்தேதி அணையில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மூவர் கண்காணிப்பு குழு தலைவரின் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். துணை கண்காணிப்பு குழுவின் தலைவரான மத்திய நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் ஆய்வு நடந்தது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்ற துணை கண்காணிப்பு குழுவினர் அணை பகுதியில் ஆய்வு செய்தனர். பேபி அணை, மதகு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். அணையின் சுரங்கப்பகுதிக்கு சென்று 8 இடங்களில் கசிவுநீர் அளவை சேகரித்தனர். இந்த ஆய்வில், தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் ராஜகோபால், கேரள பிரதிநிதிகளான கேரள நீர்ப்பாசனத்துறை பொறியாளர் சாஜி ஐசக், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் பங்கேற்றனர்.

துணை கண்காணிப்பு குழுவினர் மதகுகளை பார்வையிட்ட போது, கேரள பிரதிநிதிகள், மதகுகளை இயக்கிப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடந்த ஆய்வின் போது அணையில் உள்ள 13 மதகுகளும் இயக்கிப் பார்க்கப்பட்டது. எனவே, மதகுகளை இயக்கிப் பார்க்கத் தேவையில்லை என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் மதகுகளை இயக்கிப் பார்க்க வேண்டும் என்று கேரள பிரதிநிதிகள் தொடர்ந்து வற்புறுத்தினர். இதையடுத்து அணையில் உள்ள 13 மதகுகளில், 6 மதகுகள் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அந்த மதகுகள் அனைத்தும் நல்ல நிலையில் இயங்கின.

இதையடுத்து துணை கண்காணிப்பு குழுவினர் குமுளிக்கு திரும்பி வந்தனர். குமுளி 1–ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அணையில் 6 மதகுகள் சோதனை செய்து பார்க்கப்பட்டன. கசிவு நீர் மாதிரி சேகரித்ததில், அவை இயல்பான அளவில் தான் உள்ளது. மூவர் குழுவினர் கடந்த 7–ந்தேதி ஆய்வு செய்வதாக இருந்தது. இந்த ஆய்வு வருகிற 21–ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மீண்டும் மூவர் குழுவினர் ஆய்வு ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் இதுகுறித்த உறுதியான தகவல் கிடைக்கப்பெறும்’ என்றனர்.


Next Story