மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 16 Jun 2018 5:00 AM IST (Updated: 16 Jun 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருச்சி,

திருச்சி லால்குடி அபிஷேகபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் சந்திரன்(வயது 22). கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ்(21), கலாநிதிமாறன்(20). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு லால்குடியில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதிக்கு சென்றனர்.

அங்கு தங்கள் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு மீண்டும் லால்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சந்திரன் ஓட்டி சென்றார். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை அருகே அவர்கள் சாலையின் வளைவில் திரும்பியபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் ஓடி சென்று படுகாயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி ஆனந்த்ராஜ் இறந்தார். கலாநிதிமாறனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story