ரூ. 5 லட்சம் கோடி கடன் இருக்கையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் தேவையா? ஆ.ராசா கேள்வி


ரூ. 5 லட்சம் கோடி கடன் இருக்கையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் தேவையா? ஆ.ராசா கேள்வி
x
தினத்தந்தி 17 Jun 2018 5:15 AM IST (Updated: 17 Jun 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி கடன் இருக்கையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் தேவையா என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் கட்சி தலைவர் கருணாநிதியின் 95–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளைக்கோட்டை அண்ணாதிடலில் நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஏ.கே. மணி வரவேற்றார்.

தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா சிறப்பரையாற்றினர். அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டத்தின் அடையாளத்தை அழித்து விடக்கூடாது, அது அவர் செய்த நிர்வாகத்தின் அடையாளம் என கூறியவர் கருணாநிதி. ஜெயலலிதாவிற்கு நிர்வாகத்திலும், பொது வாழ்விலும் எந்த ஒரு அடையாளமும் இல்லை.

தமிழ்நாட்டில் எந்த ஒரு புதிய திட்டங்களும் வரவில்லை. ரூ.5 லட்சம் கோடி கடனை தமிழக அரசு வைத்துள்ளது. இப்படி இருக்கையில் ரூ.60 கோடி செலவில் மக்களின் வரி பணத்தில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் தேவையா?.

தற்போது தமிழ்நாட்டில் படிப்பதற்கு வசதிகள் இல்லாததால் இளைஞர்கள் சிலர் புதிதாக கட்சி தொடங்கியுள்ள சீமான், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை தேடிச் செல்கின்றனர். தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து சட்டமாக்க கூடிய தலைவராக கருணாநிதி திகழ்ந்து வந்தார்.

பதவி போய் 7 வருடங்களாகியும் எங்களை பார்த்து அமைச்சர் போகிறார் என்று கூறும் பொதுமக்கள், தற்போது உள்ள அ.தி.மு.க. அமைச்சர்களை யார் என்றே தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கோவன் என்ற பாடகர் டாஸ்மாக்கை மூடு என்று பாட்டு பாடியதால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை அவமானமாக பேசியதற்கு சுப்ரீம் கோர்ட்டு வரை போனதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து ஜாமீன் வழங்க முடியாது, காவல் துறை கைது செய்யலாம் என்ற உத்தரவிட்ட பின்பும் அரசு அவரை கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் முகம் பார்த்து துப்பாக்கி சூடு நடத்திய ஒரே அரசாங்கம் இந்த அரசுதான். இவ்வாறு பேசினார். முடிவில் 36–வது வார்டு செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


Next Story