‘அ.தி.மு.க. அரசின் அவலங்களை பற்றி கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும்’, பொன்முடி எம்.எல்.ஏ. வேண்டுகோள்


‘அ.தி.மு.க. அரசின் அவலங்களை பற்றி கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய வேண்டும்’, பொன்முடி எம்.எல்.ஏ. வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Jun 2018 4:30 AM IST (Updated: 17 Jun 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசின் அவலங்களை பற்றி கிராமங்கள்தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று மகளிர் அணியினருக்கு பொன்முடி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மத்திய மாவட்ட மற்றும் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாசுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் அமுதா, மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:–

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 17–ந் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மகளிர் அணியின் வளர்ச்சிக்காக பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து பேசுகிறார். எனவே இந்த கூட்டத்தில் மகளிர் அணியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் செயல்திட்டங்கள், மகளிர்களுக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்தும், அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை பற்றியும் கிராமங்கள்தோறும் சென்று தெருமுனை பிரசாரம் மற்றும் மக்களிடம் முணுமுணுப்பு பிரசாரம் செய்யுங்கள். வருகிற தேர்தலில் மகளிர் அணியினர் முன்னோடியாக இருந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story