கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தது


கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தது
x
தினத்தந்தி 17 Jun 2018 11:30 PM GMT (Updated: 17 Jun 2018 6:56 PM GMT)

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன. இதனையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று அதிகாலை ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இந்தநிலையில் அதிகாலை வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசலில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் புதிதாக தோன்றிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நடைபாதைக்கு மேல் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் காவிரி ஆற்றுக்கு செல்லும் நடைபாதை நுழைவு வாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் போலீசார், சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியாதபடி கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்தை தாசில்தார் அழகுசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் காவிரி கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அலுவலர்கள் அறிவுறுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தீயணைப்பு படையினர் மீட்புப்பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

விடுமுறைநாளையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரம் குளித்தனர். மேலும் பரிசல்கள் கரையோரங்களில் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து, நேற்று காலை 11 மணியளவில் தமிழக-கர்நாடக எல்லையான கொளத்தூர் அருகே உள்ள அடி பாலாறு பகுதிக்கு வந்தடைந்தது. அங்கு ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் கூடுதல் நீர்வரத்தின் காரணமாக, பண்ணவாடி, கோட்டையூர் ஆகிய இடங்களில் நடந்து வந்த பரிசல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் கொளத்தூரில் இருந்து நீர்வழி போக்குவரத்து மூலம் தர்மபுரி மாவட்டத்திற்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் சிரமம் அடைந்தனர். மேலும் காவிரி கரையோர பகுதிகளில் விளைவிக்கப்பட்டு இருந்த சோளம், எள் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 40 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 616 கனஅடியாக மட்டுமே இருந்தது. பின்னர் கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று பகலில் வந்து சேர்ந்ததை அடுத்து மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 87 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து இதே அளவு நீடிக்குமானால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மீனவர்களும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story