திருப்பூர் கோல்டன்நகர் பகுதியில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


திருப்பூர் கோல்டன்நகர் பகுதியில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Jun 2018 11:00 PM GMT (Updated: 17 Jun 2018 8:11 PM GMT)

திருப்பூர் கோல்டன்நகர் பகுதியில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

இந்து முன்னணியின் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் நேற்று கொடியேற்று விழா நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி மாநகருக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அந்த அமைப்பினர் கொடியேற்றி, பெயர்பலகையையும் திறந்து வைத்தனர். கோல்டன் நகர் கருணாகரபுரி நகர் பகுதியில் உள்ள நேற்றுகாலை கொடியேற்ற நிகழ்ச்சிக்காக இந்து முன்னணியினர் ஏராளமானோர் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் அங்கு கூடினார்கள்.

பின்னர் கொடியேற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள், தாங்கள் ஏற்கனவே வைத்திருந்த 2 கொடிக்கம்பங்களை அகற்றி விட்டு அதே இடத்தில் இந்து முன்னணியினர் கொடிக்கம்பத்தை நட்டு அதில் கொடியேற்றுவதாக கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி திடீரென கைகலப்பானது. இதையடுத்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்படி அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும், இதுகுறித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story