காலாவதியான மருந்துகளை வாய்க்காலில் வீசியவர் கைது


காலாவதியான மருந்துகளை வாய்க்காலில் வீசியவர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2018 4:15 AM IST (Updated: 18 Jun 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

காலாவதியான மருந்து, மாத்திரைகளை காரில் ஏற்றி வந்து வாய்க்காலில் வீசிய மருந்துக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 55). மருந்து கடை உரிமையாளர். இவர் தனது மருந்து கடையில் இருந்த காலாவதியான மருந்துகள் மற்றும் பல்வேறு மாத்திரைகள், ஊசிகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை 3 பெட்டிகளில் எடுத்துக் கொண்டு காரில் புதுவைக்கு வந்தார்.

கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியின் அருகில் சாலையோரம் காரை நிறுத்தி அந்த வழியாக செல்லும் வாய்க்காலில் காலாவதியான மருந்துகளை போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்–இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் சந்தேகமடைந்து கல்யாணசுந்தரத்திடம் விசாரித்த போது காலாவதியான மருந்து, மாத்திரைகளை அங்கு கொண்டு வந்து வீசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த காரை ராஜமாணிக்கம் சோதனை செய்தபோது உள்ளே 2 பெட்டிகள் இருந்தன. அவற்றிலும் காலாவதியான மருந்து, மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸ் நிலையத்துக்கு உதவி சப்– இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தகவல் தெரிவித்து மேலும் போலீசாரை வரவழைத்தார். தமிழக பகுதியான விருத்தாசலத்தில் இருந்து காரில் கொண்டு வந்து காலாவதியான மருந்து, மாத்திரைகளை புதுச்சேரி எல்லை பகுதியில் வீசி எறிந்த கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story