கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மாவோயிஸ்டுகள் ஊடுருவலா? மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் தீவிர கணிக்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
துடியலூர்,
கேரள– தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக அட்டப்பாடி, அகழி, மாங்கரை மற்றும் ஆதிவாசி கிராமங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக நக்சல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அனைத்து இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். உடல் நிலை சரியில்லாத மாவோயிஸ்டுகள் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக கார் மூலம் வருவதாக தகவல் கிடைத்ததால் இந்த அதிரடி சோதனை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் கூறியதாவது:–
ஆனைக்கட்டி, முள்ளி, மாங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் தடுப்புகள் அமைத்து நக்சல் தடுப்பு பிரிவினரும், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி தலைமையிலான போலீசாரும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கேரள மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களில் வருபவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. வாகன ஓட்டிகளின் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுகிறது. மேலும் மாவோயிஸ்டுகளிடம் ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதால் பலத்த கெடுபிடிக்கு பின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாமல் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆனைக்கட்டியை ஒட்டியுள்ள ஆதிவாசி கிராமங்களான காட்டுக்குழிக்காடு, ராயர் ஊத்துப்பதி, கம்புகண்டி மற்றும் அட்டுக்கல், தூமனூர், அத்திக்கடவு, பில்லூர், சேம்புக்கரை உள்பட 25–க்கும் மேற்பட்ட கிராமங்களில் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பகுதிகளில் சந்தேகப்படும் படியாகவோ அல்லது புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள தடாகம், ஆனைக்கட்டி போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
தற்போது நடைபெற்று வாகன சோதனையை 3 நாட்கள் தொடர்ந்து நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு தற்போது நடைபெறும் அரிசி, மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.