ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் - தங்கதமிழ்செல்வன் பேட்டி


ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் - தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 19 Jun 2018 4:45 AM IST (Updated: 19 Jun 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

ஆண்டிப்பட்டி,

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் கடந்த வாரம் வெளியான தீர்ப்பில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் அந்த வழக்கு 3–வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட இருக்கிறது. இதற்கிடையே நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், தன்னுடைய தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:–

நீதிமன்றம் எங்களை ஏமாற்றிவிட்டது. அதனால் நீதிமன்றத்தை கண்டித்து என்னுடைய தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவதுடன், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இனியும் நீதிமன்றத்தை நம்பி பலனில்லை. இதனால் நான், தகுதிநீக்க வழக்கை திரும்ப பெறுகிறேன்.

ஆண்டிப்பட்டியில் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இல்லையெனில், 3 லட்சம் பேரை திரட்டி மறியல் செய்து சிறைக்கு செல்லும் போராட்டத்தை நடத்துவேன். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ஒரு எம்.எல்.ஏ. தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டம் முடிந்தபிறகு தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு தங்கதமிழ்செல்வன் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– வழக்கை வாபஸ் பெறுவது குறித்து மக்கள் மனநிலை எப்படி உள்ளது?

பதில்:– இந்த வழக்கை வாபஸ் பெறுவது என நான் முடிவெடுத்து விட்டேன். இதுகுறித்து எனக்கு வாக்களித்த மக்களிடம் கருத்து கேட்கவே நான் வந்தேன். மக்கள் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை ஏற்படுமானால் வாபஸ் பெறவேண்டாம் என்றனர்.

கேள்வி:– உங்களின் இந்த முடிவை டி.டி.வி.தினகரனிடம் சொல்லிவிட்டீர்களா?

பதில்:– என்னுடைய முடிவுக்கு அவர் ஒப்புதல் அளித்து விட்டார். என்னை போலவே பிற எம்.எல்.ஏ.க்களும் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

கேள்வி:– பிரிந்து சென்றவர்கள், மீண்டும் வந்தால் வரவேற்போம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?

பதில்:– நாங்கள், அவர்களோடு இணைவதாக இருந்தால் எதற்காக இத்தனை போராட்டத்தில் ஈடுபட போகிறோம். இது தவறான தகவல்.

கேள்வி:– உங்களுடைய இந்த முடிவு உங்கள் அணியில் உள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாதா?

பதில்:– அவர்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது. ஏனென்றால், அவர்களுடன் நான் கலந்து பேச இருக்கிறேன். பேச்சுவார்த்தையின் முடிவை துணை பொதுச்செயலாளரிடம் அறிவிப்போம். 18 பேரும் வழக்கை வாபஸ் பெற்று, ராஜினாமா செய்தால் இன்னும் எங்கள் போராட்டம் வலுப்பெறும். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தான் போட்டியிடுவோம். மக்களிடம் வெற்றி பெற்று அ.தி.மு.க.வையும், சின்னத்தையும் கைப்பற்றுவதே எங்கள் நோக்கம்.

கேள்வி:– தகுதிநீக்கம் செய்யப்பட்ட நீங்கள், தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்:– தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை வந்தால் கூட நான் ராஜினாமா செய்வது உறுதி. வழக்கை வாபஸ் பெறுவேன். என்னுடைய தொகுதிக்கு உடனடியாக ஒரு எம்.எல்.ஏ. தேவை.

கேள்வி:– நீங்கள் அ.தி.மு.க.வில் இணைந்தாலும் அமைச்சர் பதவி வழங்க முடியாது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?

பதில்:– நான் எப்போது அ.தி.மு.க.வுக்கு வருகிறேன் என்று சொன்னேன். நான் வந்தால் தானே அமைச்சர் பதவி பற்றி நீங்கள் பேசவேண்டும்.

இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார்.


Next Story