தூத்துக்குடி கலவரத்தை தூண்டியதாக வழக்கு: வக்கீல்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தூத்துக்குடி கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மதுரை,
மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிராகவன் ஆகிய 2 வக்கீல்களும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், கடந்த 22–ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை தூண்டிவிட்டதாக எங்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நாங்கள் வேறு இடத்தில் இருந்தோம். கலவரத்தில் ஈடுபடவில்லை. எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதற்கு முன்னதாக ஏராளமான வாகனங்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சேதப்படுத்தினர். இதன் பின்னர் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. தூத்துக்குடி போராட்டத்துக்கு மனுதாரர்கள் மூளையாக செயல்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.