புதுவையில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் உள்பட 6 பேர் கைது
புதுவையில் முன்விரோதம் காரணமாக 3 பேரை கொலை செய்யும் நோக்கத்துடன் பதுங்கி இருந்த 6 பேரை பயங்கர ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் புதுவை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் தலைமையில் லாஸ்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 3 வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தனர். விசாரிப்பதற்காக அவர்களை போலீசார் அழைத்தனர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். ஆனால் போலீசாருக்கு போக்குக்காட்டிவிட்டு அந்த வாலிபர்கள் தப்பிச்சென்று விட்டனர். அந்த வாலிபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அவர்களை பிடிக்க ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் லாஸ்பேட்டை உழவர்சந்தை பகுதியில் வாலிபர்கள் சிலர் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் உத்தரவின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர்உசேன், கோவிந்தன் மற்றும் போலீஸ்காரர் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் அந்த வாலிபர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்திச்சென்றனர். அதில் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரிடமிருந்து கத்தி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்ததில் லாஸ்பேட்டை நெருப்புக்குழி பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (வயது19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கூட்டாளிகள் குறித்து போலீசார் தொடர்ந்த விசாரித்தனர்.
இதில் முன்விரோதம் காரணமாக புதுவை டி.வி.நகர் பகுதியை சேர்ந்த 3 பேரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக என தெரிவித்தார். இதையடுத்து நிரஞ்சன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய கூட்டாளிகளான வானரபேட்டை கஸ்தூரிபாய் வீதி திலீப்குமார் (29), லாஸ்பேட்டை அசோக்நகர் உதயகுமார் (26), ராமலிங்கம் (24), ரஞ்சித்குமார் (23), நாவற்குளம் வசந்தபுரம் அய்யப்பன் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 16–ந் தேதி லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் போலீசார் விசாரிக்க அழைத்தபோது தப்பிச்சென்றவர்கள் இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள திலீப்குமார், ராமலிங்கம், உதயகுமார் ஆகியோர் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.