நாய் செத்தால் கூட மோடி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? - பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை


நாய் செத்தால் கூட மோடி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? - பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 19 Jun 2018 1:47 AM GMT (Updated: 19 Jun 2018 1:47 AM GMT)

கர்நாடகத்தில் நாய் செத்தால் கூட மோடி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று பிரமோத் முத்தாலிக் பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

பெங்களூரு,

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 5-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் முக்கியமாக பரசுராம் வாக்மோர் என்பவரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்தவர் என்று தகவல் வெளியானது. இதை அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் மறுத்துள்ளார். இந்த நிலையில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமாத் முத்தாலிக் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

கவுரி லங்கேசை இந்து அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி கொலை செய்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் மராட்டிய மாநிலத்தில் 2 கொலைகள் நடைபெற்றன. கர்நாடகத்திலும் 2 கொலைகள் (எம்.எம்.கலபுரகி, கவுரி லங்கேஷ்) நடந்துள்ளன. இந்த கொலைகள் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தன. ஆனால் யாரும் காங்கிரஸ் அரசை பற்றி கேள்வி எழுப்பவில்லை. ஆனால் இதை பற்றி பேசுங்கள் என்று பிரதமரிடம் முற்போக்கு சிந்தனையாளர்கள் கேட்கிறார்கள். கர்நாடகத்தில் ஒவ்வொரு முறையும் நாய் செத்தால் கூட பிரதமர் மோடி பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?. இவ்வாறு பிரமோத் முத்தாலிக் பேசினார்.

கவுரி லங்கேஷ் கொலையை நாயுடன் ஒப்பிட்டு பிரமோத் முத்தாலிக் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர் அவர்களே, கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டபோது அதை தாங்கள் கண்டிக்கவில்லை. வன்முறை குழுவான ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் கொலையை நாயுடன் ஒப்பிட்டுள்ளார். இப்போது தாங்கள்(பிரதமர்) இத்தகைய கருத்தை மன்னிப்பீர்களா?.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

காங்கிரசின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பிரமோத் முத்தாலிக் நேற்று கூறுகையில், “கவுரி லங்கேசின் கொலையை நாயுடன் ஒப்பிடவில்லை. கர்நாடகத்தில் நடைபெறும் ஒவ்வொரு மரணத்திற்கும் பிரதமர் பதில் அளிக்க வேண்டுமா? என்ற கருத்தின் அடிப்படையில் தான் நான் பேசினேன். ஸ்ரீராமசேனை அமைப்புக்கும், பரசுராம் வாக்மோரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எங்கள் அமைப்பில் உறுப்பினராக இல்லை” என்றார்.

Next Story