பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம்: ராகுல்காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு


பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம்: ராகுல்காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 19 Jun 2018 7:53 AM IST (Updated: 19 Jun 2018 7:53 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் குறித்து ராகுல்காந்தியுடன் குமாரசாமி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குமாரசாமி டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா மீது பரபரப்பு புகாரை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். அவர் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. அடுத்த மாதம் (ஜூலை) பட்ஜெட் தாக்கல் செய்ய குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே கடைசியாக காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுடன் புதிய திட்டங்களை சேர்த்தால் போதுமானது என்று கூறினார்.

இதை குமாரசாமி நிராகரித்துவிட்டார். சித்தராமையாவின் இந்த கருத்தால் குமாரசாமி அதிருப்தி அடைந்து உள்ளார். மேலும் சித்தராமையாவின் கருத்துக்கு காங்கிரசிலேயே ஆதரவு கிடைக்கவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதை ஆதரிக்கிறார்கள். சித்தராமையாவின் கருத்து கூட்டணியில் விரிசல் ஏற்படுத்திவிடுமோ என்று குமாரசாமி அச்சம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து பரபரப்பு புகாரை குமாரசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கூட்டணி அரசு குறித்து குழப்பத்தை விளைவிக்கும் வகையிலான கருத்துகளை தெரிவிக்க மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு தடை விதிக்குமாறும் அவர் கோரினார்.

இந்த சந்திப்புக்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மரியாதை நிமித்தமாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினேன். அரசு எவ்வாறு செயல்பட வேண்டும், கர்நாடக வளர்ச்சியில் அவருடைய ஆலோசனைகள் என்ன என்பது குறித்தும் கேட்டு அறிந்தேன். இந்த சந்திப்பு திருப்தி கரமாக அமைந்தது. கூட்டணி அரசை எந்த சிக்கலும் இன்றி சுமுகமாக நடத்துவது குறித்தும் அவரிடம் விவாதித்தேன். இந்த கூட்டணி ஆட்சி நிலையாக நீடிக்க வேண்டும் என்றும், அதற்கு உங்களின் ஆதரவு தேவை என்றும் கூறினேன்” என்றார்.

Next Story