10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை


10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை
x
தினத்தந்தி 19 Jun 2018 7:30 AM GMT (Updated: 19 Jun 2018 7:30 AM GMT)

கடற்படையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய கடற்படையில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது சமையல்காரர், பரிமாறுபவர், துப்புரவு பணியாளர் பணிகளுக்கு 10-ம் வகுப்பு படித்தவர்களை நியமிக்கும், ‘கோர்ஸ் காமென்சிங் ஏப்ரல் 2019’ சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணமாகாத, இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பற்றி இனி பார்ப்போம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1-4-1998 மற்றும் 31-3-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

பணியின் தன்மை :

‘செப்’ பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சைவம் மற்றும் அசைவ உணவு தயாரிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஸ்டீவார்டு பணியாளர்கள், உணவு பரிமாறுதல் மற்றும், உணவு தயாரித்தலுக்கான உதவி பணிகள், ஹவுஸ் கீப்பிங் பணிகளை கவனிக்க வேண்டும், ஹைஜீனிஸ்ட் பணியாளர்கள் அறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

உடல் தகுதி:


விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், உயரத்திற்கேற்ற எடை அளவும் பரிசோதிக்கப்படும். மார்பளவு 5 செ.மீ. விரிவடையும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/36, 6/36 என்ற அளவிலும், கண்ணாடியின்றி 6/9, 6/12 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 15 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இது 15 ஆண்டு காலத்தைக் கொண்ட பணிவாய்ப்பாகும். அதன் பின்னர் தகுதியின் அடிப்படையில் பணி வாய்ப்பு பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-7-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

Next Story