கூடலூர் அருகே தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்


கூடலூர் அருகே தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:15 AM IST (Updated: 20 Jun 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தொழிலாளர்களின் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் தினமும் அவதி அடைந்து வருகின்றனர். காட்டு யானைகள் நடந்து செல்லும் வழித்தடங்களில் மின்வேலிகள் அமைத்தல், வனத்தில் போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலை உள்பட பல்வேறு காரணங்களால் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவில் குடியிருப்புகளை முற்றுகையிட்டு சேதப்படுத்துதல், பச்சை தேயிலையை பறிக்க செல்லும் தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் காட்டு யானைகள் ஈடுபடுகின்றன.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு லாரஸ்டன் பகுதியில் குட்டியுடன் கூடிய 2 காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்தது. பின்னர் அதே பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் பீதி அடைந்த தொழிலாளர்கள் அச்சத்துடன் வீட்டில் பதுங்கி இருந்தனர்.

அப்போது குட்டி யானை அதேபகுதியை சேர்ந்த 3 தொழிலாளர்களின் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தது. இதைதொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகளின் சுவர்களை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் தொழிலாளர்களும் அச்சத்தில் கூச்சலிட்டனர். இதனால் குட்டி யானை வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தது. இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகள் விடியற்காலையில் அங்கிருந்து சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இதுகுறித்து ஓவேலி பகுதி மக்கள் கூறியதாவது:– காட்டு யானைகளுடன் குட்டி ஒன்று சுற்றி வருகிறது. இந்த குட்டி யானை வீடுகள், கடைகளை உடைத்து அங்கு வைத்திருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. பார்வுட் மளிகை கடை, காந்தி நகர் டீக்கடை, வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளது. இப்போது லாரஸ்டன் பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் அந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதேபோல் கூடலூர் தருமகிரி பகுதியில் காட்டு யானை ஒன்று பல வாரங்களாக அப்பகுதியில் முகாமிட்டு வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.


Next Story