‘தமிழகத்தில் விரைவில் நாங்கள் ஒன்று கூடுவோம்’ போலீஸ் விசாரணையில் மாவோயிஸ்டு அதிர்ச்சி தகவல்
கொடைக்கானலில் ஆயுத பயிற்சி பெற்ற வழக்கில் கைதான மாவோயிஸ்டு காளிதாஸ், தமிழகத்தில் நாங்கள் விரைவில் ஒன்று கூடுவோம் என போலீஸ் விசாரணையின்போது அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில், 2008–ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுத பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் கொல்லப்பட்டார். 9 மாவோயிஸ்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் அனைவரும் தமிழகம், கேரளாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய நபரான காளிதாசை தமிழக– கேரள எல்லையான அகழி என்ற இடத்தில் கைதானார். பின்னர் அவர் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காளிதாசை ஆயுத பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்த கொடைக்கானல் போலீசார், கண்ணூர் சிறையில் இருந்து அழைத்து வந்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 18–ந் தேதி முதல் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார்.
அதன்படி, அவரை நவீன்பிரசாத் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, ஆயுத பயிற்சி மேற்கொண்ட இடங்களை போலீசாரிடம் காளிதாஸ் காண்பித்தார்.
மேலும், தமிழகத்தில் விரைவில் எங்கள் ராஜ்யம் நடக்கும். இல்லாவிட்டாலும் நாங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் என்று போலீஸ் விசாரணையில் காளிதாஸ் தெரிவித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, நக்சல் தடுப்பு பிரிவு, கியூ பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
போலீஸ் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று காலை காளிதாஸ் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 2–ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பின்னர் காளிதாஸ், கண்ணூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.