வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் காயம், பொதுமக்ள் போராட்டம்
திருப்பூரில் போலீஸ் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் காயமடைந்தார். போலீசாரை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் தெற்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் நேற்று மாலை ஈடுபட்டனர். விதிமீறும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அப்போது ஏ.பி.டி. ரோட்டில் இருந்து மங்கலம் ரோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபரை போலீசார் நிறுத்த முயன்றனர். வளைவில் வேகமாக வந்த வாலிபர் போலீசாரை கவனிக்காததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருடைய காலில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டனர்.
போலீசார் தடுத்ததால் தான் அந்த வாலிபர் தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி அப்பகுதியினர் போக்குவரத்து போலீசாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையறிந்து அங்கு வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் காயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர். காயமடைந்த வாலிபர் திருப்பூர் காதர்பேட்டையை சேர்ந்த கார் டிரைவர் பாலமுருகன் (வயது 34) என்றும், இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும், போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.