தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தபோது 84 தனியார் பி.யூ. கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது குறித்து விசாரணை


தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தபோது 84 தனியார் பி.யூ. கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது குறித்து விசாரணை
x
தினத்தந்தி 21 Jun 2018 3:15 AM IST (Updated: 21 Jun 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது 84 தனியார் பி.யூ. கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது குறித்து விசாரணை நடத்த மந்திரி என்.மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது 84 தனியார் பி.யூ. கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது குறித்து விசாரணை நடத்த மந்திரி என்.மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

84 பி.யூ. கல்லூரிகளுக்கு அனுமதி

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12–ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது புதிதாக பி.யூ. கல்லூரிகள் தொடங்க 246 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்த பி.யூ. கல்வித்துறை புதிதாக 84 பி.யூ. கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கியது.

மேலும், சில இடங்களில் அரசு கல்லூரிகள் உள்ள 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது 84 கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டு இருப்பது தேர்தல் நடத்தை விதமீறல் ஆகும். இதனால், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

விசாரணைக்கு உத்தரவு

இதுபற்றி கர்நாடக தொடக்க மற்றும் உயர் கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது புதிதாக 84 தனியார் பி.யூ. கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அரசு கல்லூரிகள் அமைந்துள்ள 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ளேயே சில கல்லூரிகள் அமைய இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளேன். விசாரணை நடத்த உள்ள குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story