8 மாவட்டங்களில் கலந்தாய்வு மறுப்பு: நாமக்கல்லில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


8 மாவட்டங்களில் கலந்தாய்வு மறுப்பு: நாமக்கல்லில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:15 AM IST (Updated: 22 Jun 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மறுக்கப்பட்டதை கண்டித்து நேற்று நாமக்கல்லில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

தமிழகத்தில் நேற்று ஆன்-லைன் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மறுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு இடைநிலை ஆசிரியர்கள் இடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் பங்கேற்கவில்லை.

மேலும் அவர்கள் 8 மாவட்டங்களில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மறுக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க நாமக்கல் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக தங்கள் சொந்த மாவட்டத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில், தங்கள் குடும்பங்களை பிரிந்து மாணவர்கள் நலனுக்காக பாடுபட்ட ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெற கிடைத்த வாய்ப்பை தமிழக அரசு தட்டிப்பறித்து உள்ளது. ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலே கிடையாது என்பது மனித உரிமை மீறல். எனவே கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்ட 8 மாவட்ட இடைநிலை ஆசிரியர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story