தேவாரம் பகுதியில் காட்டுயானையை விரட்ட பயிற்சி பெற்ற வனத்துறையினர் வருகை, விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு


தேவாரம் பகுதியில் காட்டுயானையை விரட்ட பயிற்சி பெற்ற வனத்துறையினர் வருகை, விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 23 Jun 2018 3:00 AM IST (Updated: 23 Jun 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

தேவாரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டுயானையை விரட்ட பயிற்சி பெற்ற வனத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று நடைபெற இருந்த போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த தேவாரம், பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்னா என்ற ஆணும், பெண்ணும் இல்லாத பாலின வகையை சேர்ந்த ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த யானை தாக்கி இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ணைப்புரம் வெள்ளைப்பாறை பகுதியில் தோட்ட காவலாளி பெரியகுருசாமியை அந்த யானை தாக்கியது. அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு விடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தையும், வனத்துறையையும் கண்டித்து இன்று (சனிக்கிழமை) தேவாரம் பகுதியில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

இதையடுத்து நேற்று உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர்களை அழைத்து அமைதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தாசில்தார் பாலசண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுவதாக உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம். தற்போது முதல் கட்டமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து பயிற்சி பெற்ற வனத்துறையை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் 5 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (நேற்று) இரவு வனப்பகுதிக்குள் செல்கின்றனர். மேலும் அந்த யானை எந்த பகுதியில் முகாமிட்டுள்ளது, உணவாக எதை விரும்பி தின்ன வருகிறது என்பதை குறித்து ஆராய்ந்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள். எனவே போராட்டத்தை ஒத்திவையுங்கள், என்றார்.

இதையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைப்பதாக கூட்டத்தில் அறிவித்தனர்.


Next Story