காரைக்குடியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2¼ கோடி ஹவாலா பணம் மீட்பு; 3 பேர் கைது


காரைக்குடியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2¼ கோடி ஹவாலா பணம் மீட்பு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2018 4:30 AM IST (Updated: 24 Jun 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2¼ கோடி ஹவாலா பணத்தை மீட்ட போலீசார், அதுதொடர்பாக 3 பேரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி,

காரைக்குடி பர்மா பஜார் பகுதியில் சுப்பிரமணி(வயது 48) என்பவர் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவர் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், உறவினராக சுப்பிரமணியபுரம் 1–வது வீதியில் வசிக்கும் சிட்டாள் என்பவரது வீட்டில் தனது மகனின் எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக ரூ.45 லட்சம் வைத்திருந்தேன் என்றும், அதனை தற்போது காணவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த பணம் திருட்டில் தனது கார் டிரைவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சுப்பிரமணி புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சுப்பிரமணியின் கார் டிரைவரான தந்தை பெரியார் நகரை சேர்ந்த நாராயணன்(55) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுப்பிரமணி, சிட்டாள் வீட்டில் வைத்திருந்த பணப்பையை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது உறவினர் காரியாபட்டியை சேர்ந்த செல்வராஜை அழைத்துள்ளார். அதன்படி வந்த செல்வராஜும், நாராயணனும் சேர்ந்து சிட்டாள் வீட்டில் இருந்த ரூ.45 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ராமநாதபுரம் ஓம்சக்திநகரில் வசிக்கும் சேகர் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் ராமநாதபுரம் சென்ற போலீசார், அங்கு பணம் கொடுத்து வைத்திருந்த சேகரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த பணப்பையில் ரூ.2 கோடி இந்திய பணமும், ரூ.72 லட்சம் வெளிநாட்டு பணமும் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் சுப்பிரமணி ரூ.45 லட்சம் கொள்ளை போனதாக புகார் அளித்திருந்தார். ஆனால் பணப்பையில் ஹவாலா பணம் ரூ.2¼ கோடி எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பணத்தை கொள்ளையடித்த டிரைவர் நாராயணன், செல்வராஜ், சேகர் ஆகிய 3 பேரை கைதுசெய்தனர்.

ஹவாலா பணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்திவருகின்றனர். சுப்பிரமணி ஹவாலா மோசடியில் ஈடுபட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை குறைத்து கூறினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடக்கிறது.


Next Story