மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 450 தி.மு.க.வினர் கைது


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 450 தி.மு.க.வினர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2018 4:30 AM IST (Updated: 24 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 450 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்ள வந்தார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 293 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சென்னையில் தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு கொடியுடன் சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாகச் சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு காந்திஜி ரோட்டில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 9 பெண்கள் உள்பட 77 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கோபி

– பவானி

கோபி பஸ் நிலையம் அருகே வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோபி ஒன்றிய தி.மு.க செயலாளர் சிறுவலூர் முருகன் முன்னிலை வகித்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோபி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்படத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பவானி நகர தி.மு.க சார்பில் பவானி–அந்தியூர் பிரிவு சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் என்.தவமணி, மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சரவணன், இலக்கிய அணி துணை தலைவர் அன்பழகன், துணை அமைப்பாளர் முருகேசன், நகர துணை செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கிருந்த பவானி போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 42 பேரை கைது செய்தனர்.

இதேபோல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பவானி குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டூர் சாலையில் இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஏ.சேகர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட பிரதிநிதிகள் வேலுச்சாமி, மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரசாள், புன்னம் ஊராட்சி தி.மு.க. செயலாளர் சரவணன் மற்றும் மோகன சுந்தரம் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 34 பேரை பவானி போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சத்தியமங்கலம் நகர தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில், ஒன்றிய பொறுப்பாளர்கள் தேவராஜ் (வடக்கு), இளங்கோ (தெற்கு) ஆகியோர் முன்னிலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் புவனேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நாசீர், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் செந்தில்நாதன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்தியமங்கலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 70 பேரை கைது செய்தனர்.

அந்தியூர் பஸ் நிலையம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு அந்தியூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மைபரிவு துணை தலைவர் செபாஸ்தியான் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். சாலைமறியலில் ஈடுபட்ட 35 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அம்மாபேட்டை ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் எம்.பி.அறிவானந்தம், அம்மாபேட்டை பேரூர் செயலாளர் எஸ்.பெரியநாயகம், சித்தார் கே.ஏ.குருவன், ஊராட்சி செயலாளர்கள் கே.ஜி.சரவணன் (கேசரிமங்கலம்), டி.பழனிவேல் (மாணிக்கம்பாளையம்) உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அருகில் உள்ள அந்தியூர் பிரிவு ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார், சாலைமறியல் செய்த 27 பேரை கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாளவாடியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் டி.சிவண்ணா தலைமை தாங்கினர். 30–க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

நம்பியூரில் ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் ஆனந்தகுமார், மணி, செல்வராஜ், கருப்புசாமி, சண்முகம், வேலுச்சாமி, கீதா முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 100 பேரை கைது செய்தனர்.

கொடுமுடி ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் கந்தசாமி தலைமையில் தி.மு.க.வினர் கொடுமுடி பஸ் நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கொடுமுடி போலீசார், ஒரு பெண் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

சென்னிமலை பஸ் நிலையம் அருகே ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.செங்கோட்டையன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. உடனே போலீசார், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.

இதேபோல் கோ–ஆப்டெக்ஸ் முன்னாள் மாநில தலைவர் சா.மெய்யப்பன் தலைமையில் 9 பேர் சென்னிமலை பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 450 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.


Next Story