ஜெயலலிதா வழியில் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


ஜெயலலிதா வழியில் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:15 AM IST (Updated: 24 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா வழியில் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

பவானி,

சுப்ரீம் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தி காவரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த தமிழக அரசுக் நன்றி தெரிவித்து காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் பவானி நகர அ.தி.மு.க. சார்பில் பவானியில் நடந்தது.

கூட்டத்துக்கு நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எம்.தங்கவேலு (பவானி), சரவணபவா (அம்மாபேட்டை), பவானி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் விஸ்வநாதன், நகர முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கே.ஏ.செங்கோட்டையன் பேசியபோது கூறியதாவது:–

ஜெயலலிதா வழியில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுப்ரீம் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்று தந்து காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு உள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 600–க்கும் மேலான புதிய பாடத்திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு அதிக அளவில் வணிகவியல் கல்வியை மாணவ– மாணவிகள் படிக்க முன் வந்து உள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த கல்வி ஆண்டில் கூடுதலாக ஒரு லட்சம் மாணவ– மாணவிகள் அரசு பள்ளிக்கூடத்தில் சேர்ந்து உள்ளனர். இது தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கிடைத்த பெருமை ஆகும். இந்த அளவுக்கு கல்வியில் புரட்சியை ஏற்படுத்திய பெருமை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையே சாரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில், ‘முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா, மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார். அவருடைய வழியில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,’ என்றார்.

இதில் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் செந்தில்குமரன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட முன்னாள் தலைவர் சித்தையன், தலைமை கழக பேச்சாளர் சுந்தரம் கலா உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story