தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: வெடித்த காலி தோட்டாக்கள் எங்கே? சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது வெடித்த காலி தோட்டாக்கள் எங்கே என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2–வது நாளாக சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது வெடித்த காலி தோட்டாக்கள் எங்கே என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2–வது நாளாக சோதனை நடத்தினர்.
துப்பாக்கி சூடுதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு கலவரம் ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 5 வழக்குகளுக்கும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டனர்.
அதன்படி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கு விசாரணை அதிகாரியாக நெல்லை துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமாரும், இந்திய உணவுக்கழக குடோன் அருகே நடந்த துப்பாக்கி சூடு வழக்குக்கு நெல்லை மாநகர சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கலிமுல்லாஷா, தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்குக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு, திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூடு வழக்குக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அண்ணாநகரில் நடந்த துப்பாக்கி சூடு வழக்குக்கு திருச்சி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் ஆகியோர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டி வந்தனர். அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் விவரங்களை பெறவும், துப்பாக்கிகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை துப்பாக்கிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வுஇந்த நிலையில் கலவரப்பகுதிகளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியபோது, அந்த பகுதிகளில் காலி தோட்டாக்கள் விழுந்து இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தோட்டாக்களை கண்டுபிடிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக சென்னையில் இருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் உதவி இயக்குனர்கள் விசாலாட்சி, மணிசேகர், வல்லுனர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு நிபுனர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தனர். அதேபோன்று 100–க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
2–வது நாளாக..நேற்று தடயவியல் நிபுணர்கள் 2–வது நாளாக சோதனை நடத்தினர். முதலில் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பிறகே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர். ஒரு குழுவினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முன்பகுதியில் அங்குலம் அங்குலமாக தேடுதல் வேட்டை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிலர் சிறிய குச்சியால் புதர்களை கிளறியபடி சென்றனர். அவர்களை தொடர்ந்து தடயவியல் வல்லுனர்கள் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பிரத்யேக உபகரணங்கள் மூலம் காலி தோட்டாக்கள் எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா? என்று சோதனை நடத்தினர்.
சோதனை முழுவதும் வீடியோ மற்றும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டது. மற்றொரு குழுவினர் ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பில் கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது, கார்களில் பெட்ரோல், டீசல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டு உள்ளதா? அல்லது பாஸ்பரஸ் போன்ற ஏதேனும் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் தடயவியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர். எரிந்த கார்களில் இருந்தும் பல்வேறு மாதிரிகளை சேகரித்தனர். அதனை பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குப்பை கிடங்குஇதேபோன்று கலெக்டர் அலுவலகம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளில் உள்ள குப்பைகள் மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டு, தருவைகுளத்தில் அமைந்து உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உதவியுடன், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உள்பட 11 பேர் தருவைகுளம் மாநகராட்சி குப்பை கிடங்குக்கு சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்தனர். அந்த பகுதியில் ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு மெயின் ரோட்டிலும், இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா பகுதியிலும் சோதனை நடத்தினர்.