குடகு அருகே ராணுவ பள்ளியில் மாணவன் மர்மசாவு கொலை செய்ததாக ஆசிரியர்கள் உள்பட 4 பேர் மீது போலீசில், தந்தை புகார்


குடகு அருகே ராணுவ பள்ளியில் மாணவன் மர்மசாவு கொலை செய்ததாக ஆசிரியர்கள் உள்பட 4 பேர் மீது போலீசில், தந்தை புகார்
x
தினத்தந்தி 25 Jun 2018 4:00 AM IST (Updated: 25 Jun 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

குடகு அருகே, ராணுவ பள்ளியில் மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனை கொலை செய்ததாக ஆசிரியர்கள் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

குடகு, 

குடகு அருகே, ராணுவ பள்ளியில் மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனை கொலை செய்ததாக ஆசிரியர்கள் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ராணுவ பள்ளி

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகர் அருகே உள்ளது குடிகே கிராமம். இந்த கிராமத்தில் ராணுவ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சிங்கப்பா(வயது 15) என்ற மாணவன் படித்து வந்தான். அவனது தந்தை பூவய்யாவும் அதே பள்ளியில் ஹாக்கி விளையாட்டு பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பூவய்யா விடுமுறை போட்டு இருந்தார். மாலையில் பூவய்யாவுக்கு பள்ளியில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய சிலர், பள்ளிக்கு சிங்கப்பா வரவில்லை என்று கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பூவய்யா, சிங்கப்பாவை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.

பிரேத பரிசோதனை

இந்த நிலையில் பள்ளியின் நூலகத்தின் அருகே உள்ள கழிவறையில் சிங்கப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் பள்ளியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் குசால்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிங்கப்பாவின் உடலை அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி அறிந்த பூவய்யா, உறவினர்களுடன் ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன்பே அங்கு சென்றார். அங்கு ஆம்புலன்ஸ் வந்ததும் சிங்கப்பாவின் உடலை கீழே இறக்கவிடாமல் உறவினர்களுடன் சேர்ந்து தடுத்து நிறுத்தினார். சிங்கப்பாவின் உடலை பார்த்து அவனதுதாய் கதறி அழுதார். இதுபார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து குசால்நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவன் சிங்கப்பாவின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் அவனது உடலை பிரேத பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசில் புகார்

நேற்று காலை சிங்கப்பாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்னர் சிங்கப்பாவின் உடல் அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பூவய்யா, குசால்நகர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் எனது மகன் சிங்கப்பாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவனை 3 ஆசிரியர்களும், வார்டனும் சேர்ந்து அடித்து கொலை செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் ஆசிரியர்கள், வார்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க குடிகே கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story