நெல்லை மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த ‘பலே தம்பதி’ கைது 194½ பவுன் நகை மீட்பு
நெல்லை மாவட்டத்தில் வீடுகளில் நகை–பணம் கொள்ளையடித்து வந்த ‘பலே தம்பதியை’ போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 194½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
புளியங்குடி,
நெல்லை மாவட்டத்தில் வீடுகளில் நகை–பணம் கொள்ளையடித்து வந்த ‘பலே தம்பதியை’ போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 194½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
வீடுகளில் தொடர் கொள்ளைநெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுரண்டை, சேர்ந்தமரம், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், சொக்கம்பட்டி, கடையநல்லூர், குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளில் நகை– பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன.
இந்த சம்பங்களில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி, நிஷாந்த், போலீசார் ஜோஸ், விஜய், கிருஷ்ணவேணி, ராஜேந்திரன், வடிவேல் முருகன், வசந்தகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர். தனிப்படை போலீசார், வீடுகளில் கொள்ளையடித்து வரும் கும்பலை தீவிரமாக தேடிவந்தனர்.
பணம் கேட்டு மிரட்டல்இதற்கிடையே நேற்று முன்தினம் சொக்கம்பட்டியில் உள்ள ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் வாலிபர் ஒருவர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்றவுடன் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட வாலிபர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த வாலிபர் நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள கள்ளம்புளியை சேர்ந்த செல்வராஜ் என்ற கோவிந்தன் மகன் ரவி கார்த்திக் என்ற கார்த்திக்குமார்(வயது33) எனவும், அவர் தற்போது புளியங்குடி டி.என்.புதுக்குடியில் வசித்து வந்ததும், இவர் ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி, சிறை சென்று வந்ததும் தெரிய வந்தது.
பரபரப்பு வாக்குமூலம்நேற்று தனிப்படை போலீசார் டி.என்.புதுக்குடியில் உள்ள அவருடைய வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த கார்த்திக் குமார் மற்றும் அவருடைய மனைவி பிரியங்கா(25) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
கார்த்திக் குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு ‘திடுக்’ தகவல்கள் வெளியாகின. அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நான் கடந்த 2016–ம் ஆண்டு வெளியே வந்தேன். 2017–ம் ஆண்டு முதல் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தேன். அந்த ஆண்டு தென்காசி சொர்ணபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் 10 பவுன் நகைகளையும், கே.ஆர்.காலனியில் உள்ள வீட்டில் 80 பவுன் நகைகளையும், வி.கே.புதூரில் உள்ள 3 வீடுகளில் 32 பவுன் நகைகளும், ரூ.11 லட்சத்தையும் கொள்ளையடித்தேன்.
அதே ஆண்டு ஜூன் மாதம் குற்றாலத்தில் ஒரு வீடு புகுந்து வெள்ளி பொருட்களையும், சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் தெருவிலுள்ள வீட்டில் 276 கிராம் நகைகளையும், நவம்பர் மாதத்தில் அச்சன்புதூரில் ஒரு வீட்டில் ரூ.35 ஆயிரம், நெடுவயலில் வீடு புகுந்து 17 கிராம் நகையையும் திருடி சென்றேன்.
டிசம்பர் மாதத்தில் கடையநல்லூரில் வீடு புகுந்து 32 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் திருடினேன். கடந்த ஜனவரி மாதத்தில் வாசுதேவநல்லூரிலும், பிப்ரவரி மாதத்தில் சுரண்டை, சிவகுருநாதபுரத்திலும், மார்ச் மாதத்தில் வாசுதேவநல்லூரிலும் வீடுகளில் நகைகள், பணத்தை கொள்ளையடித்தேன். மே மாதத்தில் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் ஒரு வீட்டில் 64 கிராம் நகைகள், ரூ.16 ஆயிரத்தை திருடினேன். இந்த வகையில் 194½ பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்து உள்ளேன்’ என தெரிவித்தார்.
கணவன்–மனைவி கைதுஇதை தொடர்ந்து கார்த்திக்குமாரையும், இந்த கொள்ளை சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி பிரியங்காவையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த தம்பதியர் நேற்று தென்காசி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
உல்லாச வாழ்க்கை
வீடுகளில் கொள்ளையடித்த நகைகள், பணத்தின் மூலம் கார்த்திக்குமார் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய 3 ஊர்களில் கள்ளக்காதலிகள் உள்ளனர். இவர்களுடன் அடிக்கடி கார்த்திக்குமார் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.60 ஆயிரம் கொடுத்து வந்துள்ளதாகவும், அவர்களை சந்திக்க செல்லும் போது மேலும் சில ஆயிரத்தை செலவு செய்து வந்ததாகவும், அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுத்தருப்பதாகவும், போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
பல லட்சம் செலவில் புது பங்களா
கார்த்திக்குமார் சொந்தஊரான கள்ளம்புளியில் இருந்து கொண்டு புளியங்குடி டி.என்.புதுக்குடியில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய பங்களா கட்டினார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் மனைவியுடன் குடியேறி உள்ளார். அந்த வீட்டில் அனைத்து வசதிகளுடன் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். பிரியங்கா நாகரிகமாக உடை அணிந்து நடமாடி உள்ளார். வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு அவர்கள் இருந்து உள்ளனர்.
போலீசாருக்கு ‘டிமிக்கி’
பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பூட்டி இருக்கும் வீடுகளை அடையாளம் பார்த்து வரும் கார்த்திக்குமார், இரவில் மனைவியுடன் அந்த பகுதிக்கு செல்வார். மறைவான இடத்தில் மனைவி நிற்க வைத்து விட்டு, பூட்டியிருக்கும் வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் நகைகளை மனைவியை அணியச் செய்து கொண்டு திரும்புவாராம். கூடுதல் நகைகள் சிக்கும் பட்சத்தில் அதை பிரியங்கா உடலில் மறைத்து வைத்து கொள்வாராம். தம்பதியராக மோட்டார் சைக்கிளில் வருவதால் ஆங்காங்கே சோதனைக்கு நிற்கும் போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்த மாட்டார்களாம். இதையே சாதமாக பயன்படுத்தி நள்ளிரவில் கொள்ளையடிக்கும் நகைகள், பணத்துடன் தம்பதியர் வீட்டுக்கு பத்திரமாக திரும்பி வந்துள்ளனர்.