போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: 6 பேர் கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனுதாக்கல்


போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: 6 பேர் கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனுதாக்கல்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:00 AM IST (Updated: 27 Jun 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த 6 பேர் கும்பலை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார்கள்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமரா பொருத்தி, வாடிக்கையாளர்கள் 20 பேரின் கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணம் நூதன முறையில் திருட்டப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் போலியாக ஏ.டி.எம்.கார்டு தயாரித்து பெங்களூருவில் இருந்து கொண்டு ‘சுவைபிங்’ முறையில் மர்ம கும்பல் பணத்தை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானபள்ளி யை சேர்ந்த தமிழரசன், வாசீம், சென்னையை சேர்ந்த நவசாந்தன், நிரஞ்சன், திருச்சி கிஷோர், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த மனோகரன் ஆகிய 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த மோசடிக்கு நவசாந்தன், நிரஞ்சன், தமிழரசன் ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

எனவே அவர்களை ஒரு வாரம் காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கோவை கோர்ட்டில் இன்று(புதன்கிழமை) மனு தாக்கல் செய்ய உள்ளனர். 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது தான் இந்த கும்பலின் பின்னணியில் யார்? யார்? உள்ளனர். வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

கோவை நகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா கூறியதாவது:–

போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் யாரும் பட்டதாரிகள் இல்லை. படிப்பை பாதியில் நிறுத்திய வர்கள். சிலர் 10–ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளனர். ஆனால் எலெக்டிரானிக் கருவிகளில் பதிவாகும் தகவல்களை திருடி மோசடிக்கு பயன்படுத்துவதில் மிகவும் கில்லாடிகளாக செயல்பட்டு உள்ளனர். இதற்கான அனைத்து நவீன கருவிகளையும் ஆன்லைனில் பதிவு செய்து வாங்கியுள்ளனர்.

போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து நள்ளிரவு 11.45 மணி முதல் 12.15 மணிக்குள் பணத்தை எடுத்துள்ளனர். ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே ஏ.டி.எம். மூலம் எடுக்க முடியும். எனவே முதல் நாள் முடியும் நேரமான நள்ளிரவு 12 மணிக்குள் ரூ.50 ஆயிரத்தையும், மறுநாள் தொடங்கும் நள்ளிரவு 12.01 மணிக்கு ரூ.50 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர். இதன் மூலம் ஒருவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை சுருட்டியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை செருகி, ரகசிய குறியீட்டு எண்களை அழுத்தும் போது, மற்றொரு கையால் மறைத்துக் கொள்ளவேண்டும். இதன் மூலம் ரகசிய கேமரா பொருத்தப் பட்டு இருந்தால் ரகசிய குறியீட்டு எண்கள் பதிவாகாது. மேலும் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு உள்ளதா? என்பதிலும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

சில வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி தகவல் திருட்டு போகாமல் இருக்க தகவல் பதிவு தடுப்பு கருவி (‘ஆன்டி ஸ்கிம்மர்’) பொருத்தி உள்ளனர். இதன் விலை ரூ.2,500 மட்டுமே. எனவே அனைத்து வங்கி அதிகாரிகளும் ஏ.டி.எம். மையங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ஓ.டி.பி. எண்கள் உண்மையான வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு செல்கிறதா? என்பதையும் வங்கி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை வாடிக்கையாளர்கள் அடிக்கடி மாற்றவும் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த நாளை (வியாழக்கிழமை) கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story