கோர்ட்டு அனுமதியுடன் நடத்த விவசாயிகள் முடிவு: மின்கோபுரம் எதிர்ப்பு போராட்டத்துக்கு போலீசார் தடை
சென்னிமலையில் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சென்னிமலை,
சென்னிமலை பகுதிகளில் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி, கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பொன்னுசாமி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், ‘பொய்யான காரணங்களை கூறி ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தது ஜனநாயகத்துக்கும், கருத்து உரிமைக்கும் எதிரான செயல். விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு பதிலாக சாலையோரம் மின் கேபிள் அமைக்க வலியுறுத்தி கோர்ட்டின் அனுமதி பெற்று பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் ஆதரவோடு மீண்டும் போராட்டம் நடத்துவது’ என முடிவு செய்யப்பட்டது.