மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் மணல் குவாரி தொடங்க அனுமதி - அதிகாரி தகவல்


மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் மணல் குவாரி தொடங்க அனுமதி - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:54 AM IST (Updated: 27 Jun 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் மணல் குவாரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் மருதாடு மற்றும் முட்டத்தில் அரசு மணல் கிட்டங்கிகள் செயல்படுகின்றன. இந்த மணல் கிட்டங்கிகளில் ஆன்-லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு யூனிட் மணல் 1,330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இரு மணல் கிட்டங்கிகளிலும் இதுவரை சுமார் 16 ஆயிரம் லோடு மணல் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசுக்கு சுமார் 4¼ கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. இது தவிர மருதாடு அரசு மணல் கிட்டங்கியில் ஆன்-லைன் மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து விட்டு 7,959 லாரிகள் மணல் வாங்குவதற்காக காத்திருக்கின்றன. அதேப்போல் முட்டம் அரசு மணல் கிட்டங்கியில் 5,118 லாரிகள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றன.

முன்பதிவு செய்த லாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்கப்படுவதால், 30 மணி நேரத்துக்கு முன்பு சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. இதனால் அரசு மணல் கிட்டங்கியில் லாரிகள் கியூ வரிசையில் நாட்கணக்கில் காத்து நிற்பது தவிர்க்கப்பட்டு உள்ளது.

இந்த இரு குவாரிகளிலும் சுமார் 13 ஆயிரம் லாரிகள் முன்பதிவு செய்து காத்திருப்பதால் ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மணல் விலையும் அதிகமாக உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தில் இன்னும் கூடுதலாக 2 அல்லது 3 இடங்களில் அரசு மணல் கிட்டங்கி கள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக வெள்ளாற்றில் கிளியனூர், ஆயிப்பேட்டை, மிராலூர் ஆகிய இடங்களிலும், மணிமுக்தாற்றில் மணவாளநல்லூரிலும், தென்பெண்ணையாற்றில் அக்கடவல்லி, எனதிரிமங்கலம் ஆகிய இடங்களிலும் மணல் குவாரி தொடங்க கலெக்டர் தண்டபாணி அனுமதி அளித்து உள்ளார்.

இதில் 3 குவாரிகள் மாட்டு வண்டிகளுக்கும், அரசு பணிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அரசு பணிக்கு டிராக்டரில் மட்டுமே மணல் அள்ளி செல்ல முடியும், லாரிகளில் அள்ளிச்செல்ல முடியாது. இதுதவிர வானமாதேவி, விலங்கல்பட்டு, சன்னியாசிபேட்டை, காமாட்சி பேட்டை, இலந்தம்பட்டு ஆகிய இடங்களில் மாட்டு வண்டிகளுக்காக விரைவில் மணல் குவாரி தொடங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story