தமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு - கனிமொழி எம்.பி பேட்டி
தமிழகத்தில் கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு என்று திருப்பூரில் கனிமொழி எம்.பி. கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.
திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் க.செல்வராஜ்(திருப்பூர் வடக்கு), இல.பத்மநாபன்(திருப்பூர் தெற்கு), திருப்பூர் மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி ரங்கராஜன்(திருப்பூர் வடக்கு), சரஸ்வதி(திருப்பூர் தெற்கு), மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி(திருப்பூர் வடக்கு), பிரபாவதி(திருப்பூர் தெற்கு) உள்பட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெண்களை கடவுளாக மதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பா.ஜனதா ஆட்சியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாட்டில் முதலிடத்தை இந்தியா பெற்றிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டில் தொடர்ந்து போர் ஏற்பட்டுள்ளது. அதைவிட மோசமான நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்பது அவமானமாக உள்ளது. ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு ஆட்சி செய்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்டவைகளால் தொழில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பல நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் சென்று வருகிறார். பெண்கள் எந்த அளவுக்கு இந்தியாவில் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பெண்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ தகுதியற்ற நாடாக, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருகிறது.
கவர்னருக்கு சில கட்டுப்பாடுகள், வரையறைகள் உள்ளன. அதையும் மீறி அவர் செல்லும்போது, ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், மாநில சுயாட்சிக்கு விரோதமாகவும் நடக்கும்போது தான் அதை தி.மு.க. கண்டிக்கிறது. 7 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று மிரட்டும் வகையில் கவர்னர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வருகிறது. அவர் இப்படி செய்வதற்கான பின்புலம் என்ன என்று கேள்வி எழுகிறது.
கவர்னர் வேண்டாம் என்பதே தி.மு.க.வின் நிலைபாடு. தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி அவர் கிடையாது. கவர்னரின் ஆய்வு தேவையற்றது. மதவாதிகளுக்கு யார் காவடி தூக்குகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கொஞ்சம், கொஞ்சம் இருக்கும் தீவிரவாதம் ஆர்.எஸ்.எஸ். வழியாகத்தான் ஊடுருவுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதை அகற்றுவோம்.
சரியான திட்டமிடல் இல்லாமல் பசுமை வழிசாலை திட்டத்தை கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு என்ன பயன் என்பதை விட சீனாவில் உள்ளவர்களுக்கு என்ன பயன்படுகிறது என்பதை ஆய்வில் தெரிவிக்கிறார்கள். ஆய்வில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை ஆராய வேண்டும். இவ்வளவு அவசரமாக, முனைப்பாக ஏன் செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மதுரவாயல்–சென்னை துறைமுகம் செல்வதற்கான சாலை திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அந்த திட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அடிப்படை வளர்ச்சிக்கான ஒரு திட்டம் தான். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டியிருக்கலாம்.
8 வழிச்சாலை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் எதுவும் வரக்கூடாது என்பது தி.மு.க.வின் நிலைபாடு இல்லை. மக்களை அழைத்து பேசி அவர்களின் கருத்துகளை கேட்காமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஏன் அவசரமாக பணியாற்றுகிறார்கள் என்பது தான் கேள்வி. இதற்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக சட்டசபையிலும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.