திருப்பூரில் ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொலை, 4 பேர் கைது
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் உறவினரை பணத்துக்காக கடத்தி கொடூரமாக கொலை செய்து உடலில் கல்லைக்கட்டி அணையில் வீசி சென்றனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 47), பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவந்தார். இவருடைய மனைவி துர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், 1½ வயதில் மகன் உள்ளனர். சிவமூர்த்தி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மனைவியின் தங்கை பத்மினியின் மருமகன் ஆவார்.
சிவமூர்த்தி கடந்த 25–ந் தேதி காலை 11 மணிக்கு கோவைக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது சொகுசு காரில் புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய 3 செல்போன்களும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை சின்னசாமி நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவருடைய செல்போன் எண்கள் மற்றும் மாயமான காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் துப்புதுலக்கி வந்தனர். சிவமூர்த்தி காரின் பதிவு எண் தமிழகம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அப்போது நேற்று முன்தினம் இரவு அந்த கார் கிருஷ்ணகிரி மற்றும் வாணியம்பாடி சோதனை சாவடிகள் வழியாக கடந்துசென்றது கண்டறியப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் போலீசாருக்கு திருப்பூர் போலீசார் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினார்கள்.
ஆம்பூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வெங்கிளி என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக வந்த சிவமூர்த்தியின் காரை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த விமல் (35), கவுதமன் (22), மணிபாரதி (22) என்பது தெரியவந்தது.
3 பேரையும் ஆம்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் சிவமூர்த்தியை கடத்திச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பிணத்தை 2 நாட்களாக காரிலேயே வைத்து சுற்றிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் கல்லைக் கட்டி வீசிச்சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் நேற்று கெலவரப்பள்ளி அணைக்கு அழைத்துச்சென்று சிவமூர்த்தியின் உடலை அணையில் இருந்து மீட்டனர். சிவமூர்த்தியின் கை, கால் மற்றும் முகம் ‘டேப்பால்’ சுற்றப்பட்டு இருந்தது. உடலோடு ஒரு மைல்கல்லும் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது.
உடலை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி(35) என்பவரையும் திருப்பூர் போலீசார் காரமடையில் பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:–
கைதானவர்களில் ஒருவரான விமல் திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர் பெற்றுக்கொடுக்கும் ஏஜெண்ட் அலுவலகம் நடத்திவந்தார். இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிவமூர்த்திக்கும், விமலுக்கும் பழக்கம் உள்ளது. இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு விமலுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனில் சிக்கி தவித்தார். பணம் கொடுத்து உதவுமாறு சிவமூர்த்தியிடம் விமல் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
சிவமூர்த்தியிடம் அதிக பணம் இருப்பது தெரிந்த விமல் அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார். இதற்காக தனக்கு தெரிந்த மூர்த்தி(35) மற்றும் கட்டிட தொழிலாளிகளான மணிபாரதி(22), கவுதமன்(22) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு உல்லாச பயணம் போகலாம் என்று சிவமூர்த்தியிடம் விமல் கூறினார். இதை நம்பிய அவரும் 25–ந் தேதி காலை வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே நின்றுகொண்டிருந்த விமலை காரில் ஏற்றிக்கொண்டார்.
அப்போது காரமடை அருகே உள்ள குறுந்தமலை கோவிலுக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி மணிபாரதி, கவுதமன், மூர்த்தி ஆகியோர் நின்றிருந்தனர். அவர்களை மேட்டுப்பாளையத்தில் இறங்கிவிடுமாறு விமல் கூறியதன்பேரில், 3 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டனர்.
சிறிது தூரம் காட்டுப்பகுதியில் சென்றதும் சிவமூர்த்தியை காரில் இருந்த 4 பேரும் சேர்ந்து அடித்து தாக்கினர். அவரை கட்டிப்போட்டு மிரட்டி சிவமூர்த்தியின் தந்தையிடம் ரூ.50 லட்சம் பறிக்க திட்டமிட்டனர். அதில் ரூ.25 லட்சத்தை விமலும், மீதமுள்ள பணத்தை மற்ற 3 பேரும் சேர்ந்து பிரிக்கவும் திட்டமிட்டு இருந்தனர். அதன்படி பணம் கேட்டு சிவமூர்த்தியை விமல் மிரட்டினார்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சிவமூர்த்தி சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த 4 பேரும் சேர்ந்து அவருடைய முகத்தில் அட்டைப்பெட்டிகள் ஒட்ட பயன்படுத்தும் ‘டேப்பால்’ சுற்றினர். பின்னர் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் மயங்கி இறந்தது தெரியவந்தது.
திட்டம் தோல்வியில் முடிந்ததால் சிவமூர்த்தியின் உடலை எங்கு கொண்டுசெல்வது என்று தெரியாமல் திணறினர். சிவமூர்த்தியின் சட்டைப்பையில் இருந்த ரூ.1 லட்சத்தை எடுத்து மூர்த்தியிடம் ரூ.40 ஆயிரம் கொடுத்து அவரை காரமடையில் இறக்கிவிட்டு, எஞ்சிய பணத்துடன் மற்ற 3 பேரும் காரில் பிணத்துடன் புறப்பட்டனர்.
25–ந் தேதி மாலை சென்னை செல்வதற்காக தாம்பரம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர் வழியாக சென்று நேற்று முன்தினம் மாலை கெலவரப்பள்ளி அணைக்கு சென்று சிவமூர்த்தியின் உடலோடு ஒரு மைல்கல்லை எடுத்து கட்டி அணைக்குள் வீசினர். அங்கிருந்து காரில் வந்தபோது தான் 3 பேரும் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.