ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 60 கிலோ கஞ்சா பறிமுதல் கேரள வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 60 கிலோ கஞ்சாவை, திண்டுக்கல்லில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக காரில் கஞ்சா கடத்தப்படுவதாக, திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுஷர்நிஷா, சப்–இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், காஞ்சித்தலைவன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல்–தாடிக்கொம்பு சாலையில், ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் வேகமாக வந்தது. இதனை கண்ட போலீசார், அஞ்சலி ரவுண்டானா அருகே அந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் 2 மூட்டைகளில் மொத்தம் 60 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள ஆலவன்னா பகுதியை சேர்ந்த அபுபக்கர் மகன் பவாஸ் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்று, கேரள மாநிலத்தில் விற்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் கடத்தலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு, பவாசை கைது செய்தனர். மேலும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.