அதிரடிப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
சத்தியமங்கலத்தில் அதிரடிப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சிறப்பு இலக்கு அதிரடிப்படை போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த கோபி (வயது 37) என்பவர் சிறப்பு இலக்கு அதிரடிப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மனைவியும், மகளும் விருத்தாசலத்தில் வசித்து வருகிறார்கள். கோபி காவலர் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை கோபி தனது வீட்டில் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஜன்னல் வழியாக பார்த்த அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு தூக்கு கயிற்றில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. மேலும், அவர்கள் இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பணிச்சுமையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.