சங்கரன்கோவில் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த கோரி பா.ஜ.க.வினர் மனு
நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் பிரசார பிரிவு செயலாளர் ராஜ்தேவேந்திரன் தலைமையில், சங்கரன்கோவில் நகரசபை பொறியாளர் முகைதீன் அப்துல்காதரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
சங்கரன்கோவில்,
நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் பிரசார பிரிவு செயலாளர் ராஜ்தேவேந்திரன் தலைமையில், சங்கரன்கோவில் நகரசபை பொறியாளர் முகைதீன் அப்துல்காதரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு உள்ள சங்கரநாராயணசுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கடந்த 1986–ம் ஆண்டு அரசு சார்பில், திருவேங்கடம் சாலையில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் அந்த பஸ் நிலையம் சில நாட்களே செயல்பாட்டில் இருந்தது.
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சங்கரநாராயணசுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவின் போது மட்டும் தான் பஸ்நிலையம் செயல்பட்டு அங்கு பஸ்கள் வருகின்றன. பழைய பஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் மற்றும் பஸ்கள் எளிதில் சென்று வர முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. புதிய பஸ் நிலையம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது.
இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். எனவே புதிய பஸ் நிலையத்தை மறுசீரமைப்பு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அப்போது, சங்கரன்கோவில் ஒன்றிய நிர்வாகிகள் பிச்சையா பாண்டியன், ரவீந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.