விளை நிலங்கள், குடியிருப்புகள் பாதிக்காத வகையில் ரெயில் பாதை அமைக்க வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை


விளை நிலங்கள், குடியிருப்புகள் பாதிக்காத வகையில் ரெயில் பாதை அமைக்க வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

விளை நிலங்கள், குடியிருப்புகள் பாதிக்காத வகையில் மன்னார்குடி-பட்டுக்கோட்டை இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டத்தில் மன்னார்குடி நகரத்தையும், பட்டுக்கோட்டை நகரத்தையும் இணைக்கும் வகையில் புதிய அகல ரெயில் பாதை அமைக்கப்படும் என்று 2011-12-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனமும், ரெயில்வே துறை ஊழியர்களும் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, நாடியம்பாள்புரம், வெண்டாக்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்கள் வழியாக புதிய அகல ரெயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்த ஆய்வு செய்தனர்.

இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், பள்ளிகள், கோவில், வீட்டுமனைகள் உள்ள பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது. திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து இந்த 5 கிராமங்களை தவிர்த்து மாற்று பாதையில் அமைக்க வேண்டும் என்று அதற்கான வரைபடத்தையும் கொடுத்து விளக்கம் அளித்தோம். இந்த வரைபடத்தின் மூலம் ஆய்வு செய்த அதிகாரிகள், புதிய வழித்தடத்திலேயே ரெயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

2012-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்திலும், எங்கள் கிராமங்களின் வழியாக ரெயில் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம். எங்கள் கோரிக்கையின் பேரில் நிலம் கையகப்படுத்தும் பணியை ஆய்வு செய்ய 2013-ம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி பட்டுக்கோட்டைக்கு வந்த தெற்கு ரெயில்வே துணை பொதுமேலாளரை சந்தித்து இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தோம்.

இந்த திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என்றும், பொதுமக்கள் கருத்து கேட்டதற்கு பிறகே மன்னார்குடி-பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் பழைய ஆய்வுப்படியே எங்கள் கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

எனவே கோவில்கள், குடியிருப்புகள், வீட்டுமனைகள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், விளை நிலங்கள் பாதிக்கப்படாமலும், ஆறுகள் மீது புதிய மேம்பாலங்கள் கட்ட கூடுதலாக ஏற்படும் செலவினத் தொகை ரூ.50 கோடியை ரெயில்வே துறை மிச்சப்படுத்தவும் மாற்றுப்பாதையில் மன்னார்குடி-பட்டுக்கோட்டைக்கு இடையே புதிய ரெயில்பாதையை அமைக்கும் வகையில் புதிய ஆய்வு பணி மேற்கொள்ள தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு எங்கள் மனுவை பரிந்துரை செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story