குடிநீர் வினியோக உரிமை தனியாருக்கு ஒப்பந்தம்: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
கோவையில், குடிநீர் வினியோக உரிமையை தனியாருக்கு ஒப்படைத்ததை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவையில் குடிநீர் வினியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை. ஆனால் போலீசார் அனுமதி அளிக்காவிட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கு திரண்டனர். காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
இதற்கு மாநில துணைச்செயலாளர் கே.சுப்பராயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடிநீர் வினியோக உரிமையை தனியாரிடம் ஒப்படைத்த தமிழக அரசு மற்றும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் சி.சிவசாமி, ஆர்.ஏ.கோவிந்தராஜன், சி.தங்கவேல், ஜே.ஜேம்ஸ், எஸ்.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.