திண்டிவனம் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கொலை வழக்கில் ஓராண்டுக்கு பிறகு தொழிலதிபர் உள்பட 3 பேர் போலீசில் சிக்கினர்


திண்டிவனம் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கொலை வழக்கில் ஓராண்டுக்கு பிறகு தொழிலதிபர் உள்பட 3 பேர் போலீசில் சிக்கினர்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:30 AM IST (Updated: 30 Jun 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கொலை வழக்கில் தொழிலதிபர் உள்பட 3 பேரை ஓராண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

பிரம்மதேசம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுருகன் (வயது 39). பி.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு வித்யா(30) என்கிற மனைவியும், சம்யுக்தா(9), தீப்திகா(4) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பழனிமுருகன் திண்டிவனத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி, காஞ்சீபுரம் மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளார் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

இவர் தினந்தோறும் கடைக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி கடந்த 8.5.2017 அன்று காலை ஜெராக்ஸ் கடைக்கு சென்ற பழனிமுருகன் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

இந்நிலையில் மறுநாளான மே 9–ந்தேதி காலை பழனிமுருகன் திண்டிவனம்–மரக்காணம் சாலையில் உள்ள அரசு வேளாண்மைதுறை உழவர் பயிற்சி நிலையம் அருகே ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பழனிமுருகனின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவர் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் 5 தனிப்படை போலீசார், பழனிமுருகனை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கொலை நடந்து ஓராண்டாகியும், இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது. இதனால் போலீசாருக்கு இந்த வழக்கு ஒரு சவாலாகவே இருந்தது. இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் கூலி படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், அவர்கள் மூலம் யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து கூலி படையை சேர்ந்தவர்களின் பட்டியலை தயார் செய்து, அதன் மூலம் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தினார்கள். அதன்படி வேலூர் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த கூலி படையை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த அருண் மூலம் திண்டிவனத்தை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நெல்வாய் அருணை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் தனது நண்பரான சென்னை முகப்பேரை சேர்ந்த சக்திவேல் என்பவர் தூண்டுதலின்பேரில் நெல்வாய் கதிரவன்(30) என்பவருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி திண்டிவனத்தை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பழனிமுருகனை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பணம் கொடுக்கல்–வாங்கல் தகராறு காரணமாக பழனிமுருகன் அடித்து கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் வெளியானது. இதையடுத்து உடனடியாக சக்திவேல், கதிரவன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது சக்திவேல் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நானும், பழனிமுருகனும் சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் ஒன்றாக படித்தபோது நண்பர்கள் ஆனோம். தற்போது சென்னையில் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் நான், வட்டிக்கும் பணம் கொடுத்து வருகிறேன். பழனிமுருகன் தெள்ளாரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அப்போது நான் பழனிமுருகனிடம், என்னிடம் செல்லாத 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ரூ.12½ லட்சம் உள்ளது என்று கூறினேன். அதற்கு அவர் என்னிடம் கொடுத்தால், நான் மாற்றி தருகிறேன் என்றார். இதைநம்பிய நான் செல்லாத ரூபாய் நோட்டுகள் ரூ.12½ லட்சத்தை பழனிமுருகனிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அதனை மாற்றி தராமல் ஏமாற்றிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் பழனிமுருகனை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி எனது நண்பர்களான வேலூர் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த அருண், கதிரவன் ஆகியோருடன் வேலூர் காகிதபட்டறை ராஜாவை சந்தித்து, அவர் மூலம் கூலிப்படையை ஏவி, கடந்த ஆண்டு மே 8–ந்தேதி இரவு கடையில் இருந்த பழனிமுருகனை காரில் கடத்தி வந்து, தெள்ளார் அருகே கெடிலம் ஏரிக்கரையில் வைத்து அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தோம். பின்னர் பழனிமுருகன் விபத்தில் இறந்ததாக போலீசாரை நம்ப வைப்பதற்காக அவரது உடலை திண்டிவனம் வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி நிலையம் அருகே சாலையில் வீசி சென்றோம். ஆனால் எங்களை போலீசார் கைது செய்து விட்டார்கள்.

மேற்கண்டவாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story